Tuesday, March 31, 2009

மதினா ரவ்லா ஷரிப்

மஸ்ஜிதுன்னபவியின் வானளாவிய மினாராக்களை வெகு தொலைவிலிருந்தே காண கண் கோடி வேண்டும். நள்ளிரவு நேரத்திலும், கண்ணைப் பறிக்கும் ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது இப்புனிதப் பள்ளி. சமீப காலம் வரை மஸ்ஜிதுன்னபவியைச் சுற்றி ஆக்கிரமித்துக் கொண்டிருந்த பெரும் பெரும் அடுக்கு மாடிக் கட்டிடங்கள் கூட, உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை கொடுத்து அப்புறப்படுத்தப்பட்டு இப்போது மிகப் பெரிய அளவில் பள்ளி வளாகம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பள்ளி வெளிப்புற வளாகத்தின் பெரும் பகுதியில் தரை மட்டத்திற்குக் கீழ் கார் நிறுத்துமிடமும், கழிவறைகளும், அமைக்கப்பட்டுள்ளன. எல்லா நுழைவாயில்களுக்கு அருகிலும்- அடித்தளப் பகுதியில் உலூச் செய்யும் குழாய் வசதிகளும், கழிவறைகளும் அமைக்கப்பட்டு - உள்ளே சென்று வர தானியங்கிப் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இயலாதவர்களும். முதியவர்களும் கூட எளிதில் சென்று வர முடியும்.பள்ளியின் வெளிப்புற வளாகத்திலேயே, பல இலட்சம் பேர் நின்று தொழ முடியும். பளீரென்ற வெள்ளைப் பளிங்குக் கற்களால் தரை முழுவதும் இழைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஆண்டுப் பெருகி வரும் கூட்டத்திற்கு ஏற்றபடி - பள்ளி மிகவும் விசாலமாக இப்போது வடிவமைக்கப் பட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்கள் எந்நேரமும் - பள்ளியின் உள்ளேயும், வெளியேயும் தூய்மைப் படுத்திக் கொண்டே இருக்கின்றனர். தரையை சுத்தம் செய்வதற்காகவே சிறப்பான முறையில் வடிவமைக்கப் பட்ட இயந்திரங்கள் சுத்தம் செய்துக் கொண்டே இருக்கின்றன. பரந்து விரிந்த பள்ளியின் உட்பகுதி முழுவதும் குளிர் சாதன வசதி செய்யப் பட்டு, கடும் கோடையிலும் கூட இதமான குளுமையை அனுபவிக்க முடிகிறது. உட்பகுதியின் ஒரு பக்கம் மாபெரும் தானியங்கிக் குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. வெயில் மற்றும் மழை நேரங்களில் இந்த ராட்சதக் குடைகள் விரிந்துக் கொள்ளும். மற்ற நேரங்களில் குடைகள் சுருங்கி காற்றோட்டத்தை ஏற்படுத்தும். மற்றொரு பக்கம்- காங்கிரீட் மேற் கூரை- தனித்தனிப் பகுதிகளாக அப்படியே நகர்ந்து- திறந்துக் கொள்ளும். வெயில் மற்றும் மழை நேரங்களில் மூடிக் கொள்ளும். கற்பனைக் கெட்டாத கட்டடக் கலையின் அற்புத வடிவமைப்புகள் காண்போரை பிரமிக்கச் செய்கின்றன. பள்ளியின் உட்பகுதி முழுவதும்- பல்லாயிரக் கணக்கில் குடி நீர் பிளாஸ்குகள் வைக்கப்பட்டு, மக்காவிலிருந்து ஜம்ஜம் நீர் கொண்டு வந்து தினந்தோறும் நிரப்பப்படுகிறது.மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராமில், இரவும் பகலும் மக்கள் கஃபாவைத் தவாபு செய்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் இந்த மஸ்ஜிதுன்னபவியில், இரவு இஷாத் தொழுகை முடிந்ததும், அனைவரும் வெளியேற்றப் படுகின்றனர். பள்ளியின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் இரவில் யாரையும் உறங்க அனுமதிப்பதில்லை. இஷாத் தொழுகை முடிந்து அடைக்கப்பட்ட பள்ளியின் கதவுகள், தஹஜ்ஜுத் தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்டவுடன் திறக்கப்படுகின்றன. எல்லா நாட்களிலும் தஹஜ்ஜுத் தொழுகையை நிறைவேற்ற ஹாஜிகள் ஆர்வத்துடன் வந்து விடுகின்றனர். பஜ்ருத் தொழுகை வரை இறை வணக்கத்தில் ஈடுபடுகின்றனர்.—————————————————அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனையப் பள்ளிகளில் தொழுவதை விட எனது பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்தது. அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி) ஆதாரம்: புகாரி (1190)இந்த ஹதீஸின் கருத்தை உணர்ந்த ஹாஜிகள், தஹஜ்ஜுத் தொழுகையைக் கூடத் தவற விடுவார்களா? மதீனாவில் தங்கியிருக்கும் நாட்களில் மஸ்ஜிதுன்னபவியில் அதிகமதிகம் தொழுகையில் ஈடுபட்டு நன்மைகளை சேர்ப்பதில் கவனமாக இருக்கின்றனர்.இன்றைய தினம் பஜ்ருத் தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றி விட்டு மக்கள் கூட்டம், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் புனித அடக்கத்தலத்தை ஜியாரத் செய்ய அலைமோதுகிறது. பள்ளியின் உட்பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னோக்கி நகருகின்றனர். இதோ! முதலில் தெரிவது ‘சுவர்க்கப் பூங்கா”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:‘எனது வீட்டிற்கும் எனது மிம்பருக்கும் இடைப்பட்டப் பகுதி சுவர்க்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும்.” அறிவிப்பவர்: அபு ஹூரைரா (ரலி) ஆதாரம்: புகாரி (1195)இந்த இடத்திற்கு அடையாளமாக, அழகான பச்சைக் கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நபி மொழி அரபியில் ‘மா பைன பைத்தீ வ மிம்பரீ ரவ்லதன் மின் ரியாலில் ஜன்னா” என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள் நின்று தொழவைத்த இடமும் (மிஹ்ராபுன்னபி) பிரசங்கம் செய்வதற்காக நின்ற மேடையும், அருகருகே அமைந்துள்ளன. பாக்கியம் பெற்ற இந்த இடங்களுக்கருகில் நிற்கவும், நின்று தொழவும் ஹாஜிகள் அலைமோதுகின்றனர்.அடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுகின்றனர். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் துயில் கொண்டுள்ள புனித அடக்கத்தலத்தை நோக்கி! இதோ! தூய நபியவர்கள் துயில் கொண்டுள்ள தூய்மைத் தலம். உண்மை நபியவர்கள் உறங்கும் உன்னத அடக்கத் தலம். மனங்கவரும் இஸ்லாத்தை மனங்குளிர போதித்த மனித குல மாணிக்கத்தின் மறைவிடம்.புவியெங்கும் மக்கள் புகழ் பாடிக் கொண்டாடும், புனிதரின் பூத உடல் இங்கே தான். யுகம் யுகமாய் திருந்தாதக் காட்டுமிராண்டிகளாக இருந்தவர்களை, இருபத்து மூன்றே ஆண்டுகளில் இகமே போற்றும் இனிய தோழர்களாய் மாற்றியமைத்த இனியவரின் புனித உடல் இங்கே தான்.அவர்களின் அடக்க ஸ்தலத்திற்கு எதிரே நின்று அவர்களுக்கு சலாம் கூறி பின் திரும்பி நின்று இறைவனிடம் கையேந்தி துவா கேட்பார்கள்.ஒரு சிலர் அண்ணலார் அடக்க ஸ்தலத்தை நோக்கி கையேந்தி துவா கேட்க முனையும் போது அருகில் உள்ள காவலர்கள் அவர்களை தடுத்து இறைவனிடம் கேளுங்கள் என அவர்களை திருப்பி விடுவர்.ஹரம் ஷரிஃபின் அருகிலேயே 'ஜன்னத்துல் ஃபக்கி' எனும் மையவாடி உள்ளது. இங்கு தான் பத்திமா நாயகம் முதல் நிறைய நபி மார்கள், ரசூலுல்லாஹ் அவர்களின் குடும்பத்தினர்,அன்சாரித் தோழர்கள் பலரும் அடக்கம் செய்யப் பட்டிருக்கிறார்கள்

0 கருத்துகள்:

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா