பாரம்பரிய சமையலுடன் சிறப்பு விருந்தினராக இங்கு அறிமுகப்படுத்தபடுவர் , அறுசுவை தோழி அப்சாரா சலீமா.
பாரம்பரிய சமையலுடன் சிறப்பு விருந்தினர் பதிவு - Traditional Recipes With Special Guest Post.
அப்சராசலீமா அறுசுவையில் கூட்டாஞ்சோறு பகுதியில் சமையல் குறிப்பு பகிர்ந்துள்ள தோழி,
அப்சாரா இல்லம் என்ற அழகிய பிளாக்கையும் எழுதி வருகிறார்,சமையல் மட்டும் இல்லை சில பயனுள்ள வீட்டு குறிப்புகள் மற்றும் மருத்துவ குறிப்பும் பகிர்ந்துள்ளார்கள்.
துபாயில் இருந்து பிறகு சொந்த ஊர் சென்று இப்போது சிங்கப்பூரில் வசிக்கிறார்கள் முத்தான முன்று பிள்ளைகள்.
இங்கு துபாயில் தான் இருந்தால் இரண்டும் முன்று முறை சந்திக்க நினைத்தும் சந்தர்ப்பம் சூழ்நிலை காராணமாக சந்திக்க முடியாமல் போய்விட்டது, அது அவர்களுக்கும் எனக்குமே மிக் மிக வருத்தம். போனில் மட்டுமே பேசிக்கொண்டோம். இனி இறைவன் நாடினால் விரைவில் சந்திப்போம் அப்சாரா.
கைவேலை பாடுகளும் செய்வதில் கை தேர்ந்தவர் . அவர்களின் மாமியார் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே கைவேலை பாடுகள் செய்வதில் கை தேர்ந்தவர், தன் மாமியாரை சகல கலவல்லவர் என்று பெருமையாக சொல்லும் அன்பான மருமகள்.
அவங்க குழந்தைகளை கவனித்து கொள்வதில் நேரம் சரியாக இருப்பதால் நிறைய பல குறிப்புகள் செய்து வைத்து இன்னும் போஸ்டிங் போட முடியாமல் இருக்கிறார்கள்.
பரோட்டா செய்ய தெரியாதவர்கள் இதை பார்த்து ஈசியாக செய்யலாம்..
( இங்கு என்னை இங்கு பாரம்பரிய குறிப்பு , சிறப்பு விருந்தினர் பதிவு ஆரம்பிகக் வைத்த அமெரிக்காவில் வசிக்கும் கீதாகிருஷ்ணன் க்காக மேலே உள்ள பரோட்டா லின்க்) கீதா தான் கேட்டார்கள் , உஙக்ளுக்கு மட்டும் எப்படிஅக்கா பரோட்டா நல்ல வ்ருது , நானும் செய்து பார்க்கிறேன், இன்னும் சரியா வரவில்லை என்றார்கள்.)
அறுசுவைத்தளம் பற்றி :- ))
நமக்கு தெரிந்த சமையல் வகைகளை இப்படியும் பலருடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?அதுவும் உலகத்தில் ஆங்காங்கே இருப்பவர்களோடு நம் தாய்மொழியிலேயே எழுதி ஒருவரையொருவர் பேசி பகிர்ந்து கொள்ளலாமா என நான் வியந்த விஷயம்தான் இந்த அறுசுவைத்தளம்.என்னதான் சமையலில் அனுபவம் இருப்பினும் அதை ஸ்டெப் பை ஸ்டெப்பாக படம் பிடித்து அத்துடன் குறிப்பு எழுதி பகிர்வது என்பது எனக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது.இங்கு நிறைய அனுபவமிக்க,பல திறமைமிக்க நிறைய தோழிகளின் அறிமுகம் கிடைத்தது.இங்கு எனக்கு கிடைத்த அனுபவத்தில் நான் கற்றுக் கொண்டது நிறைய என்றுதான் எல்லோரிடமும் பெருமையாக சொல்வேன்.
பாரம்பரிய சமையல் பற்றி அப்சரா கூறுவது :- ))
பாரம்பரிய சமையல் என்றாலே ஒரு குறிப்பிட்ட சில சமையல் வகைகளை,அவர்களின் எந்த ஒரு சிறிய பெரிய
விஷேஷங்களானாலும்,கட்டாயம் அந்த உணவு இடம்பெற்றிருக்கும்.இருந்தே ஆக வேண்டும்.இது ஊருக்கு ஊர்,நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும்.மற்றபடி
காலம்காலமாக அந்த பழக்கம் இருந்து கொண்டுதான் வருகின்றது.
எங்கள் ஊர் பகுதிகளில் இருக்கும் ஒரு பழக்கத்தை ஒரு எடுத்துக்காட்டுக்கு
சொல்லவேண்டுமானால்,ஒரு பெண் பூப்பெய்து விட்ட உடனேயே… கிராமாமக இருப்பதால் அந்த தெருவே
அமர்களப்படும்.உடனே பருப்புசாதம் செய்து பெரிய தாம்புலத்தில் கொட்டி நான்கு ஐந்து
முட்டைகளை வெங்காயம் நிறைய சேர்த்து அடை போல் ஊற்றி பொறித்து அந்த சாதம் மேல்
வைத்து விடுவார்கள்.பின்னர் அந்த தெரு குழந்தைகளை கூப்பிட்டு அப்படியே சுற்றி
உட்கார வைத்து சாப்பிட சொல்வார்கள்.
பூப்பெய்த பெண்ணுக்கு உளுந்து,நல்லெண்ணெய்,முட்டை இம்மூன்றும் கலந்த படி ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு விதமாக செய்து கொடுப்பார்கள்.அதிலும் உளுந்து களி என்று ஒன்று செய்வார்கள்
பாருங்கள்.உதிரி உதிரியாக சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும்.அக்கம்பக்கத்து
வீட்டிற்க்கு கூட அவ்வபோது நிறைய செய்து கொடுத்தனுப்புவார்கள்.இதெல்லாம் ஒரு
அலாதிதான்….(வெளிநாட்டில் இருக்கும் நம்மை போன்றவர்களுக்கு இவையெல்லாம் மிஸ்ஸிங்தான்)
புதிதாக திருமணம் ஆகி தனிக்குடித்தனம் செல்லும் தம்பதியர்களுக்கும், விருந்துக்கு வரும் விருந்தாளிகளை சமாளிக்கவும் இவர்களுடைய டிப்ஸ் இங்கே சென்று தெரிந்து கொள்ளுங்கள்
அப்சராவின் பாரம்பரிய சமையல் - உளுந்தங்களி
இதோ நான்
பார்ம்பரிய சமையலுக்காக கொடுக்கவிருக்கும் குறிப்பு...
உளுந்தங்களி...நார்மலா
இதை கொஞ்சம் சுருக்கி எங்கள் ஊர்களில் உளுவாக்களி என்பார்கள்.
இது வயதுக்க
வந்த பெண்களுக்கும்,
கத்னா(சுன்னத்)செய்யப்பட்ட
ஆண்பிள்ளைகளுக்கும் எங்கள் வீடுகளிலும்,எங்கள் ஊர் பகுதிகளிலும் செய்வது காலம் காலமாக தொடர்ந்து வருகிறது.
உளுந்தும்,முட்டையும்,நல்லெண்ணையும் சேர்ந்து கொடுக்கப்படும் இந்த களி உடம்புக்கு,அதிலும் குறிப்பாக பெரியவர்கள் சொல்லும்போது
இடுப்புக்கு பலம்தரும் என்றுதான் சொல்லுவார்கள்.
எனவே இந்த களியை
பெண் வயதுக்கு வந்தோ,ஆண் பிள்ளைக்கு கத்னா செய்த பத்து
நாட்களுக்குள் இதை மூன்று முறையாவது இது போன்று களியாக செய்து தருவார்கள்.
இதை சிலர் அந்த
வீடுகளில் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.ஏழாம் நாட்களில் பெரும்பாலும் பெரிய
சட்டியில் கிளறி தெருவில் உள்ல எல்லா வீடுகளுக்கும்,உறவினர்களுக்கும் கொடுத்து விடுவார்கள்.இது பழக்கமாகவே இருந்து வருகிறது.
இந்த பொருட்களை
வைத்து இடையிடையே தோசை போன்றும் வார்த்து கொடுப்பார்கள்.இன்னும் ஒரு சில ஊர்களில்
இதனை ஆவியில் வேக வைத்தும் கொடுப்பார்கள்.
சரி இனி இதன்
செய்முறையை பார்க்கலாம்.
உளுந்தங்களி
தேவையான
பொருட்கள்
கறுப்பு முழு
உளுந்து - ஒரு டம்ளர்
அரிசி மாவு - அரை கப்
சீனீ - முக்கால் கப்
உப்பு - ஒரு தேக்கரண்டி
முட்டை - 3
தேங்காய் - அரை(ஒரு மூடி)
நெய் - 100 மிலி
நல்லெண்ணெய் - 125 மிலி
செய்முறை
உளுந்தை
குறைந்தது 4
மணி நேரம்
ஊறவைக்க வேண்டும்.
தேங்காயில்
முதலில் முக்கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி முதல் திக்கான பாலாக எடுத்துக் கொள்ள
வேண்டும்.(சில தேங்காயில் முதல் பாலே அவ்வளவாக திக்காக வராது.அப்படியிருப்பின்
சிறிது கூடுதலாக தேங்காய் சேர்த்துக் கொள்ளவும்.)
அதை தனியே
வைத்துக் கொண்டு பிறகு அதன் சக்கையில் இன்னும் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி
மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி தண்ணி பாலாக எடுத்து கொள்ளவும்.
பின்பு
ஊறியிருக்கும் உளுந்தை அவ்வளவாக தோல் நீக்காமல் வெறும் கழுவி விட்டு மிக்ஸியில்
முதலில் தண்ணீர் இல்லாமல் ஒரு சுற்று சுற்றிவிட்டு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர்
பாலை விட்டு நைசாக வரும் வரை முழுவதையும் ஊற்றி அரைக்கவும்.
உளுந்து ஓரளவு
நைசானதும் அதில் அரிசி மாவு சேர்த்து ஒரு சுற்று அரைக்கவும்.அதன் பின் மூன்று
முட்டைகளையும் அதில் ஊற்றி உப்பும் சேர்த்து நன்கு மிக்ஸியில் எல்லாம் நன்கு ஒன்று
சேரும் படி அரைத்து விட்டு ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும்.
பிறகு அதில்
கெட்டி தேங்காய் பாலை சேர்த்து கலந்து விடவும்.வேறு ஏதும் தண்ணீர் சேர்க்க
வேண்டாம்.
ஒரு கனமான
இரும்பு அல்லது இந்தாலியன் சட்டியை அடுப்பில் வைத்து அதில் நெய் மற்றும் எண்ணெயை
ஊற்றி சூடுப்படுத்தவும்.
சூடு வந்ததும்,அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு,அதில் கலந்து வைத்திருக்கும் மாவை மெதுவாக
ஊற்றவும்.
உடனே சட்டியில்
பிடிக்க ஆரம்பிக்கும் எனவே மெதுவாக கிளறி கொண்டிருக்கவும்.கட்டி கட்டியாக
சுருளும்.பயப்படாமல் மெதுவாக ஐந்து நிமிடம் கிளறி விட்டு குறைந்த் தீயில் மூடி
போட்டு ஒரு ஐந்து நிமிடவும் அப்படியே விடவும்.
மீண்டும் ஒரு முறை கிளறி விட்டு இன்னும் ஒரு நிமிடம் அப்படியே வைக்கவும்.
இப்போது திறந்து
கிளறிப் பார்த்தால் கரண்டியில் அவ்வளவாக ஒட்டாது.கையில் தொட்டு பார்த்தாலும் பிசுபிசுப்பாக இருக்காது இந்த நிலையில் சீனியை சேர்த்து நன்கு ஒன்று சேர கிளறவும்.
மறுபடியும் அது இளகும்.அப்படியே குறைந்த தீயிலேயே 15 நிமிடம் விட்டு விட வேண்டும்.இடையிடையே கிளறி கொள்ள வேண்டும்.அடி கொஞ்சம்
மெல்லியதாக பிடித்து சிவந்திருக்கும்.அதையும் சுரண்டி விட்டு சேர்த்து கிளற
வேண்டும்.
பதினைந்து
நிமிடம் கழித்து பார்த்தால் நெய் மினு மினுக்க பொல பொல வென்று இருக்கும்.இப்போது
இறக்கி விடவும்.
அந்த அடியில
உள்ளதை சுரண்டி கிளறிவிட்டோமேயானால் பொன்னிறமானாதாக ஆங்காங்கே பார்க்க மட்டுமல்ல
சாப்பிடவும் நல்ல சுவையாக இருக்கும்.(அவ்வபோது சுரண்டி கிளறினால தான் அது
பொன்னிறமானதாக மொறு மொறு வென்று சுவையாக இருக்கும் தீய விடக்கூடாது)
சுவையான மிகவும்
சத்து நிறைந்த உளுவாக்களி எனப்படும் உளுந்து களி இதோ உங்களுக்காக....
குறிப்பு :- )))
இதற்க்கு வெள்ளை
உளுந்தும் பயன்படுத்தலாம்.தோலுடன் இருந்தால் தான் அதிக சத்து என்பார்கள்.இரண்டாவது
அப்படிதான் அந்த காலத்தில் செய்தார்கள்.மொத்தமாக கழுவி காய வைத்து மில்லில்
கொடுத்து அரத்து வைத்துக் கொண்டு அவ்வபோது மாவை கொஞ்சம் எடுத்து களி செய்து
சாப்பிடுவார்கள்.
இப்போது நிறைய
பேர் வெள்ளை உளுந்து உபயோகிப்பதால் இந்த களியையும் அதிலேயே கிண்டி விடுகிறார்கள்.
சமையல் அட்டகாசம்(அட நம்ம ஜலீலா அக்கா பற்றிங்க..) :- ))
இப்படி அறுசுவை தளத்தில் நான் கண்டு வியந்தவரில் ஒருவர் ஜலீலா அக்கா…. 600 க்கும் மேற்பட்ட குறிப்புகள் கொடுத்திருக்கிறார்கள் என்ற சிறப்பு உண்டு.அதையும் தாண்டி நான் கண்டு வியக்கும் விஷயம்… வேலைக்கும் சென்று கொண்டு வீட்டில் இருப்பவர்களுக்கு ஏற்றார்போல் சமைத்து கொண்டு கிடைக்கும் நேரங்களில் மிகவும் நேர்த்தியாக குறிப்புகளை வழங்கி வருவது என்பது என்னை பொருத்தவரையில் சாதாரண விஷயமே இல்லை.அவ்வபோது அத்தனை தோழிகளின் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்வார்.எனக்கு நிறைய ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்.தனிப்பட்ட முறையில் ஒரு வலைப்பக்கத்தை என்னாலும் உருவாக முடியும் என்று என்னை ஊக்கபடுத்தியவரும்
ஜலீலா அக்கா தான்.அதற்க்கென நான் கேட்க்கும் விஷயங்களை பொறுமையோடு சொல்லிகொடுத்தவர்.எனவே எனது அனுபவத்தில் முக்கிய பங்கு வகிப்பவர் ஜலீலா அக்கா….
ஜலீலா அக்காவின் சமையல் குறிப்புகளில் பொதுவான வகை சமையல் முறை எங்கள் குடும்ப செய்முறைப்படி தான் பெரும்பாலும் இருக்கும்.எனவே அவரின் குறிப்புகள் என்னை மிகவும் ஈர்க்கும்.நிறைய பிற நாட்டு குறிப்புகள் கொடுத்திருந்தாலும்,என்னை கவர்ந்ததில் குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் அரபு நாட்டு உணவு வகைகள்.அதிலும் குப்பூஸ் இலகுவாக வீட்டிலேயே செய்ய முடியும் என்பதை ஜலீலா அக்காவிடம்தான் கற்றுக் கொண்டேன்.இப்படி அவரின் திறமையை சொல்லிக் கொண்டே போகலாம்.என்ன நான் துபாயில் இருந்தவரை அவரை சந்திக்க முடியவில்லையே என்பதுதான் என்னுடைய வருத்தம்.இப்போதும் எத்தனையோ திறமையான நிறைய அனுபவமிக்கவர்களான மனோ அக்கா,ஆசியா அக்கா இவர்களுக்கெல்லாம் மத்தியில்,இப்போதுதான் வலைப்பக்கத்தில் தவழ்ந்து கொண்டிருக்கும் என்னையும் இங்கு அழைத்ததற்க்கு என் மனமார்ந்த நன்றியை ஜலீலா அக்காவிற்க்கு இங்கு சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன்.
மிக மிக அருமையான சத்தான உளுந்தங்களி (பூப்பெய்திய பெண்களுக்கும், கத்னா செய்த ஆண் பிள்ளைகளுக்கும் ஏற்ற குறிப்பை கொடுத்தமைக்கு மிக்க நன்றி அப்சரா.
இதை ஆண்களும் இடுப்பெலும்பு பலம் பெற செய்து சாப்பிடலாம்.
எங்க வீடுகளில் கறுப்பு உளுந்து இனிப்பு சுண்டல் அடிக்கடி செய்து சாப்பிடுவோம்.
*************************************
பாரம்பரியம் பாது காக்கப்படுகிறது இங்கே -
அறுசுவை தோழிகள், தமிழ் குடும்ப தோழிகள்,முக நூல் தோழியர்கள் வலை உலக தோழ தோழியர்கள் மற்றும் இதை பதிவை பார்ப்பவர்கள் யாருக்கும் விரும்பம் உள்ளவர்கள் உங்கள் ஊரின் பாரம்பரிய சமையல் குறிப்புகளை என்னுடன் இங்கு பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
என்ன குறிப்பாக இருந்தாலும், அதாவது டிபன் வகை, மதிய உணவிற்கு செய்யும் கறி வகைகள், மாலை நேர சிற்றுண்டி மற்றும் இரவு சாப்பாடு வகைகள்.குழந்தைகளுக்கு செய்யும் உணவு, கர்பிணி பெண்களுக்கான உணவு, பூப்பெய்திய பெண்களுக்கான உணவு, பிள்ளை பெற்றவர்களின் பத்திய உணவு, திருமணத்தில் செய்யும் முக்கிய வகை உணவு, விஷேச நாட்களில் செய்யும் பலகாரம்மற்றும் பல.....வகைகளை அனுப்பலாம்.. நானும் சிலரை அழைக்கிறேன்...விருப்பம் உள்ளவர்கள் இங்கு கிழே என் பதிவின் கீழ் கருத்து தெரிவிக்கலாம் அல்லது கிழே கொடுக்கப்பட்டுள்ள என் முகவரிக்கு மெயில் அனுப்புமாறு கேட்டு கொள்கிறேன்.
feedbackjaleela@gmail.com or cookbookjaleela@gmail.com
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/