பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
இந்த பதிவு எனக்கு மெயிலில் வந்தது.ஒவ்வொரு முஸ்லிம் ஆணும் பெண்ணும் பின்வரும் கேள்விகளைத் தன்னிடம் தானே கேட்டு அவற்றுக்கு விடைகாண முயல்வது ஒவ்வொருவரது வாழ்க்கையையும் வெற்றிகரமாக அமைத்துக்கொள்ள ஏதவாக அமையும். இவ்வாறு தன்னைத் தானே விசாரிப்பது இஸ்லாமியப் பரிபாஷையில் முஹாஸபதுன் நப்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
ஹழ்ரத் உமர்(ரழி)அவர்கள், நீங்கள் விசாரிக்கப்பட
முன்னர் உங்களை நீங்களே விசாரித்துக் கொள்ளுங்கள், நீங்கள்
கணிப்பிட்டுபார்க்கப்பட முன் உங்களை நீங்களே கணிப்பிட்டுப் பார்த்துக்
கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். உமர்(ரழி) அவர்கள்
தன்னைத்தானே விசாரித்துக்கொள்வதுடன் தனக்குத்தானே தண்டனையையும்
விதித்துக் கொண்டுள்ளார்கள். முஹாஸாதுன் நப்ஸ், இஸ்லாத்தில் உள்ள
விடயமொன்றாகும். இந்த வகையில் எம்மை நாமே திருத்திக் கொள்ள
பின்வரும் கேள்விகளை எம்மிடம் நாமே கேட்டுக் கொள்ள முயற்சிப்போமாக!
சுவனத்தை ஆவல் கொண்டுள்ள எமக்கு இது ஒரு நல்ல வழிகாட்டலாக அமையும்.
கிழமைக்கு ஒரு முறை அல்லது தினமும்
1. பள்ளியில் இந்தக் கிழமை முழுவதும் சுபஹ் தொழுகையை ஜமாஅத்தோடு
நிறைவேற்றினாயா? உரிய நேரத்தில் தொழுதாயா?
2. அனைத்துத் தொழுகையையும் பள்ளியில் ஜமாஅத்தோடு நிறைவேற்றினாயா? உரிய
நேரத்தில் தொழுதாயா?
3. இந்தக் கிழமையில் குர்ஆன் ஓதி வந்தாயா? மனனம் செய்தாயா?
4. ஒவ்வொரு தொழுகையின் பின்னரும் திக்ரு, அவ்ராது போன்றவற்றை ஓதி வந்தாயா?
5. பயபக்தியுடன் தொழுதாயா? குர்ஆனை விளங்கி சிந்தித்து ஓதினாயா?
6. மவ்த்து, மறுமைபற்றி சிந்தித்தாயா? கண்ணீர் விட்டு அழுதாயா?
7. பர்ளுத்தொழுகைகளுக்கு முன்பின் உள்ள சுன்னத்துத் தொழுகைகளைத் தொழுதாயா?
8. மறுமையின் கஷ்டங்கள், பயங்கரம் பற்றி சிந்தித்தாயா?
9. நபியவர்கள் “யார் சுவர்க்கத்தை மும்முறை வேண்டுகிறாரோ சுவர்க்கம்
அவர்ரைத் தன்னில் நுழைத்து விடுமாறு வேண்டுகிறது. யார் நரக விடுதலையை
வேண்டுகிறாரோ நரகம் அவரை தன்னில் நுழைக்காதிருக்கும் படி வேண்டுகிறது”
என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதற்கமைய உன் பிரார்த்தனை
அமைந்திருந்ததா?
10. நபியவர்களின் ஹதீஸ்களை ஒவ்வொரு நாளும் வாசித்தாயா? விளங்கிக் கொண்டாயா?
11. உனது நண்பர்களுடன் எவ்வாறு நடந்து கொண்டாய்?
12. தீய நண்பர்களை விட்டும் ஒதுங்க நினைத்தாயா?
13. அதிக சிரிப்பையும், கேளிக்கைகளையும் தவிர்க்க நினைத்தாயா?
14. இக்கிழமையில் அல்லாஹ்வை நினைத்து பயந்து அழுதாயா?
15. காலை, மாலை திக்ருகளை ஓதி வந்தாயா?
16. பாவமன்னிப்பு கேட்டாயா? இஸ்திஃபார் செய்தாயா?
17. தூய்மையான உள்ளத்துடன் இறைபாதையில் மரணத்தைச் சந்திக்க
அல்லாஹ்விடம் பிராத்தித்தாயா?
18. அல்லாஹ்வின் மார்க்கத்தில் உனது உள்ளம் நிலைத்திருக்க அவனை வேண்டினாயா?
19. துஆக்களுக்கு அல்லாஹ் பதிலளிக்கின்ற நேரங்களைப் பார்த்து பிரார்த்தனை
செய்தாயா?
20. உனக்காக கோபப்படுவதை விட்டு அல்லாஹ்வுக்காகவே கோபப்பட்டாயா?
கோபத்தை பொறுத்தவரை உனது நிலை எவ்வாறு காணப்பட்டது?
21. பொறாமை, கர்வம் போன்றன உனது உள்ளத்தில் தோன்றாதவாறு உள்ளத்தை
பார்த்துக்கொண்டாயா?
22. பொறாமை, முகஸ்துதி, குரோதம் போன்ற தீய உணர்வுகளிலிருந்தும்,
பொய்யுரைத்தல், கோள், வீண்வாதம், வீண்கேளிக்கைகள் போன்ற தீய
உணர்வுகளிலிருந்தும் உன்னை, உனது உள்ளத்தை பார்த்துக் கொண்டாயா?
23. நீ உண்ணும் உணவு, உடுக்கும் உடை, அருந்தும் பானங்கள் போன்ற இன்னோரன்ன
அம்சங்களில் அல்லாஹ்வை பயந்து கொண்டாயா?
24. தஹஜ்ஜத் தொழுகையில் உனது நிலை எவ்வாறு இக்கிழமையில் இருந்தது.
25. உன் தாய், தந்தையருக்கு நன்றியுடையவனாக இருக்க வேண்டுமென்ற வகையில்
அவர்களுக்காகப் பிராத்தித்தாயா? நண்பரகள், உறவினர்களுக்காகவும்
பிராத்தனை செய்தாயா?
26. அல்லாஹ்வுடைய பாதையில் உனது பணத்தில் இருந்து செலவளித்தாயா?
எவ்வளவு செலவளித்தாய்?
27. நன்மைகள் உன்னை அடைந்த போது அல்லாவுக்கு நன்றி செலுத்தினாயா?
28. உன்னைத் துன்பங்கள் அணுகிய போது பொறுமையுடன் ' இன்னாலில்லாஹி
வஇன்னா இலைஹி ராஜிஊன் ' என்று கூறினாயா?
29. உன்னுடன் பழகுபவர்களுடன், உன் பக்கத்தே வாழ்வோருடனும் நன்றாக நடந்து
கொண்டாயா?
30. உன்னை விட வயது முதிந்தவர்களைக் கண்ணியப்படுத்தி இளம் வயதினர்களுடன்
அன்பாக நடந்து கொண்டாயா?
31. இந்தக் கிழமையில் இஸ்லாமிய நூற்களை வாசிப்பதில் எவ்வளவு தூரம் அக்கரை
செலுத்தினாய்? என்னென்ன நூற்களை வாசித்தாய்?
32. நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதில் எவ்வளவு தூரம் பங்கு கொண்டாய்?
33. உனது பொழுது போக்கு எவ்வாறு இருந்தது? அல்லாஹ் திருப்திப்படும்
விதத்தில் அவை அமைந்திருந்ததா?
34. பிற சமய சகோதரர்களுடன் உமது தொடர்பு எவ்வாறு இருந்தது? அவர்ககள் உனது
நடவடிக்கைகளைத் திருப்தியோடு ஏற்றுக் கொண்டனரா?
35. உனது வீட்டு அங்கத்தவர்களுடன் எவ்வாறு நடந்து கொண்டாய்? பெற்றோர்கள்,
பிள்ளைகள், சகோதரர்களுடன் நட்புடன் நடந்து கொண்டாயா?
36. எத்தனை முறை இஸ்திஹ்பார் செய்தாய்? உனது நாவு எத்தனை தடவை
ஸூப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹூ அக்பர் என்று உரைத்தது?
37. இறைவனைப் புகழும்போது அவனது படைப்புக்களைப் பார்க்கும்போதும் உனது
மனநிலை எவ்வாறிருந்தது? அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினாயா?
38. உன்னை விட அறிவில், அழகில் உடலமைப்பில் உயர்ந்தவர்களை,
தாழ்ந்தவர்களைக் கண்ட போது அல்லாஹ் உனக்கருளிய அருளையிட்டு அவனுக்கு
நீ நன்றி செலுத்தினாயா?
39. நீ செய்த தீய செயல்களை நினைத்து வருந்தி மீண்டும் அதனை செய்யமாட்டேன்
என்று உறுதி பூண்டு அல்லாஹ்விடம் தௌபாச் செய்தாயா?
40. உரிய நேரத்தில் உரிய கடமைகளைச் செய்தாயா? வாக்களித்தபடி நடந்து
கொண்டாயா? உரிய நேரத்தில் சமூகம் அளிக்கத்தவறி பிறருக்கு அசௌகரியம்
ஏற்படுத்தினாயா?
இது போன்ற கேள்விகளைத் தன்னிடம் தானே கேட்டு விசாரித்துக் கொள்வதுடன்
தன்னில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள முயல வேண்டும். அதனை
வழக்கமாக செய்து வரும் பொழுது குறைகள் நீங்க ஏதுவாகும். அவ்வாறே
அல்லாஹ்வின் திருப்திக்குப் பொருத்தமானவர்களாகவும் நாம் அமையலாம். வல்ல
அல்லாஹ் நம் அனைவருக்கும் ஈருலக வெற்றியையும் நஸீபாக்குவானாக! மனிதனின்
வெற்றி அல்லாஹ்வின் திருப்தியிலே தங்கியிருக்கிறது. எமது அமல்கள்
அல்லாஹ்சுக்காக என்ற தூய எண்ணத்தில் அமைய அல்லாஹ்வையே நாம்
பிராத்திப்பேமாக!
மரணம் நிச்சயம் இடம் பெறுகின்ற ஒன்று அது எங்கு எப்போது எவ்வாறு
இடம்பெறும் என்பதை அல்லாஹ் மட்டுமே அறிவான். எந்த நேரத்திலும் தயாராக இருக்கவே வேண்டும் எம்மை நாமே சுய விசாரனை செய்வதன் மூலம் எம் தவறை நாமே திருத்தி அல்லாஹ்வின் திருப்தியையும் மன்னிப்பையும் பெற்ற நன்மக்களாக எம்மை அமைத்துக் கொள்ள உறுதி கொள்வோமாக!